யார் இந்த ஹாதியா? இதுவரை நடந்தது என்ன? ஒரு முழு ரிப்போர்ட்!

0
630

உச்சநீதிமன்றம் வரை சென்று ஒட்டுமொத்த நாடும் திரும்பி பார்க்கும் ஒரு பெண்ணாக திகழ்ந்து கொண்டிருக்கிறார் ஹாதியா என்ற இளம்பெண். காதலருக்காக மதம் மாறி திருமணம் செய்து கொண்ட இவரை கணவனிடம் இருந்து நீதிமன்றம் பிரித்து வைத்தததன் பின்னணி என்ன என்பதை இக்கட்டுரை விவரிக்கிறது.

பயோ-டேட்டா:

ஹாதியாவுக்கு அவரது பெற்றோர்கள் வைத்த பெயர் அகிலா. கேரளாவில் உள்ள கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த அசோகன் – பொன்னம்மா தம்பதியினரின் மகள்தான் இவர். தீவிர இந்து பக்தியை பின்பற்றும் இவரது குடும்பத்தில் பிறந்த அகிலா பள்ளிப் படிப்பு வரை கேரளாவிலேயே படித்துவிட்டு, கடந்த 2௦1௦ம் ஆண்டு சேலத்தில் உள்ள சிவராஜ் ஹோமியோபதி மருத்துவ ஆராய்ச்சிக் கல்லூரியில் தனது இளங்கலை பட்டப்படிப்பை தொடங்கியுள்ளார்.

அகிலா டூ ஹாதியா:

ஹாதியாவுக்கு கல்லூரி விடுதி பிடிக்காத காரணத்தினால், தனது நெருங்கிய தோழிகளான ஜெசீலா மற்றும் ஃபசீனா ஆகியோருடன் தனியாக வெளியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி கல்வியை தொடர்ந்துள்ளார். ஜெசீலாவும் ஃபசீனாவும் சகோதரிகள். அவர்களது இசுலாம் மத கடவுள் மீது கொண்டிருந்த பற்று அகிலாவை வெகுவாக ஈர்த்தது. இசுலாமியத்தின் கொள்கைகளையும் பின்பற்ற தொடங்கியுள்ளார். அகிலா என்ற தனது பெயரை ஹாதியா என மாற்றிக்கொண்டார்.

மதமாற்றம்:

படிப்பை முடித்ததும், 2௦15ம் ஆண்டு சட்டப்படி தான் இசுலாமிய மதத்திற்கு மாறுவதற்கான வேலைகளை தொடங்கியுள்ளார். முழு இசுலாமியத்தை தழுவுவதற்கான முயற்சிகளிடையே அகிலா தனது பெயரையும் ஹாதியா என சட்டப்பூர்வமாக மாற்றிக்கொண்டார். ஹாதியாவாக மாறிய அகிலா கேரளத்தில் உள்ள தனது வீட்டில் நடக்கும் மதம் சார்ந்த பண்டிகைகள், பூஜைகளில் கலந்துகொள்வதை நிறுத்திக்கொண்டார். பெற்றோர்கள் பல முறை அழைப்பு விடுத்தும் கூட ஹாதியா அந்த சடங்குகளில் பங்கேற்கவில்லை.

பிரச்சினையின் ஆரம்பம்:

தனது மகள் மதம் மாறிய உண்மையை 2௦16ம் ஆண்டு அறிந்துகொண்ட அசோகன், ஹாதியா கட்டாயப்படுத்தப்பட்டு மதம் மாற்றப்பட்டார் எனவும், தற்போது அவர் தோழிகளின் வீட்டில் தங்கியிருப்பதாகவும் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் கேரள போலீசார் ஜெசீலா, ஃபசீனாவின் தந்தையான அபுபக்கரை கைது செய்தனர்.

அசோகன் மனு:

இந்த நிகழ்விற்கு பின் ஹாதியாவின் தந்தை கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு பெரும் புயலைக் கிளப்பியது. ஹாதியா என்கிற அகிலா, கட்டாயத்தின் பேரில் மதம் மாற்றப்பட்டிருக்கிறார். இதன் மூலம் அவரை சிரியாவிற்கு கடத்தி, அவரை ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர்க்க திட்டமிட்டுள்ளனர் என அந்த மனுவில் அசோகன் கூறியிருந்தார்.

ஹாதியாவின் திருமணம்:

தன் தந்தையின் பூச்சாண்டிக்கெல்லாம் சற்றும் அஞ்சாத ஹாதியா, தனது அடுத்த செக்கை வைத்தார். 2௦16ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் தேதியன்று ஷாகின் ஜெகான் என்ற இசுலாமிய இளைஞரை திருமணம் செய்துகொண்டார். அதிர்ந்து போன அசோகன் இந்த திருமணத்திற்கு எதிராக வழக்கே தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஹாதியாவின் திருமணம் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடந்துள்ளதாக கூறியது. இந்த திருமணத்தை சட்டரீதியாக ஏற்க முடியாது என்றும் கடந்த மே மாதம் அறிவித்தது. இதையடுத்து ஹாதியா அவரது கணவரிடம் இருந்து விலக்கப்பட்டு பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

உச்சநீதிமன்றம் தலையீடு:

இதற்கு எதிராக வெகுண்டு எழுந்த ஹாதியாவின் கணவர் ஜெகான், உச்சநீதிமன்றதிற்கே சென்று வழக்கு தொடுத்தார். அவரது மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஜெகான்-ஹாதியா திருமணம் செல்லாது என அறிவிக்க கேரள உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என கூறியது. இதன் ஒரு அங்கமாக, கேரளாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவான செயல்பாடுகள் நடக்கிறதா என கண்காணிக்க தேசிய புலனாய்வு அமைப்பை கேட்டுக்கொண்டது. இதை கேரள உயர்நீதிமன்றம் ஏற்கவில்லை. தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணை தேவை இல்லை என கூறியது.

வாதங்கள் வெடித்தன:

இதன் பிறகு, ஜெகான் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 2௪ வயதுடைய பெண்ணுக்கு தான் யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என முடிவெடுக்கவும், எந்த மதத்தை பின்பற்ற வேண்டும் என முடிவெடுக்கவும் உரிமை உண்டு என குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மீதான விசாரணையை நடத்திட, ஜெகான் சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபில், இந்திரா ஜெய்சிங் ஆகியோர் ஆஜராகி திறமையாக வாதிட்டனர்.

ஹாதியாவின் தந்தை தரப்பில் இருந்து மூத்த வழக்கறிஞர் மாதவி திவான் வாதிட்டார். ஹாதியா சில சதி திட்டங்களால் சூழப்பட்டிருக்கிறார். அவர் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார். மூளைச்சலவை செய்து மதம் மாற்றப்பட்டுள்ளார் என கடுமையாக வாதிட்டார்.

கடைசி கட்டளை:

கடந்த நவம்பர் 27ம் தேதி ஹாதியா உச்சநீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது அவர் தனக்கு சுதந்திரம் வேண்டும் என கோரினார். தன்னை தனது பெற்றோர்கள் 6 மாதங்களாக வீட்டுச்சிறையில் வைத்திருப்பதாகவும், தனக்கு செல்போன், டிவி, செய்தித்தாள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தார். கடந்த 6 மாதங்களாக தனது கணவரையே சந்திக்க விடவில்லை, தொடர்ந்து தனது பெற்றோர்கள் மூளைச்சலவை செய்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார். எனவே தான் படிப்பை தொடர விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து ஹாதியா தன் படிப்பை தொடர ஏற்பாடு செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அவருக்கான பாதுகாவலராக கல்லூரி முதல்வரையே நியமித்தது.

இப்போது ஹாதியா மீண்டும் சிவராஜ் ஹோமியோபதி மருத்துவ ஆராய்ச்சிக் கல்லூரிக்குள் நுழைந்துள்ளார். மீண்டும் பாடபுத்தகங்களை கையில் எடுத்திருக்கிறார். ஹாதியாவை புரிந்துகொண்ட அவரது கல்லூரி, ஹாதியா விரும்பினால் அவரது கணவரை சந்திக்க ஏற்பாடு செய்வோம் என கூறியிருக்கிறது. இதை எதிர்த்து அசோகன் மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here