தமிழ்நாட்டு இளைஞர்களே இதை செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?

0
1133

‘திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு’ என்று ஔவையார் அப்போதே உள்நாட்டு வேலையில்லா திண்டாட்டத்தை பற்றி பாடி வைத்தார். உள்நாட்டில் வேலை இல்லை என்றாலும் கடல் கடந்து போய் வெளிநாட்டில் வாய்ப்பு தேடுங்கள் என்று சொல்லிவிட்டார் என்றுதான் எடுத்துக்கொள்ள தோன்றுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் என்பது பன்மடங்கு அதிகரித்துள்ளதாகவும், அடுத்த 35 ஆண்டுகளில் இது மேலதிகமாக அதிகரிக்கும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையே ஆய்வுகளின் கணிப்பில் கூறியுள்ளது. 2030க்குள் உலகில் ஜி-20 நாடுகளில் 600 மில்லியன் வேலைகள் உருவாக்கப்பட வேண்டும். இல்லையென்றால் வேலையின்மை என மிகப்பெரிய சுமையை நெருக்கடியுடன் சந்திக்க வேண்டிய நிலை உண்டாகும் என்று உலக வங்கியும் எச்சரித்துள்ளது. ஜி-20 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் ஒரு உறுப்பினர் அங்கம் வகிக்கிறது. இந்த வேலையில்லா திண்டாட்டத்தை கடுப்படுத்த இந்திய அரசும் மக்களும் எப்படி அக்கறை காட்டி, என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்? என்னென்ன மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என விரிவாக அலசி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

இதுவரை நாம் செய்துள்ள தவறுகள்:

1. பள்ளி முதல் கல்லூரி வரையிலும் வெறும் பழைய எழுத்தாளர்கள் எழுதிவைத்த உரைநடை கல்வியை மட்டுமே பயின்று வந்துள்ளோம்.
2. படிப்பு, வேலை என எல்லா விடயங்களிலும் மற்றவர்களை பின்தொடர்ந்து சென்றுள்ளோம்.
3. கல்வி என்றாலும், தொழில்நுட்பம் என்றாலும் அதன் முழுஉட்கூறுகளை ஆராயாமல் நமக்கு சாதகமான அல்லது பிடித்தமான ஒரு பகுதியை மட்டுமே அடையாளம் காண்கிறோம், கற்றுக்கொண்டிருக்கிறோம்.
4. விவசாயம், நெசவு, கால்நடை உள்ளிட்ட மரபுசார் வேலைவாய்ப்புகளையும், அவற்றுக்கான கல்வி முறைகளையும் தவிர்த்து வந்துள்ளோம்.
5. எதிர்கால தேவைகளை பாராமல் ஏகத்திற்கும் மக்கள் தொகை பெருக்கத்தை ஆதரித்துள்ளோம்.
6. தவறான அரசுகளை உருவாக்கியிருக்கிறோம் அல்லது அரச பயங்கரவாதத்திற்கு கட்டுப்படுகிறோம்.
7. இயந்திரத்துவம், முதலாளித்துவத்திற்கு அடிபணிந்து செல்கிறோம்.

இளைஞர்கள் இதை செய்தால் 2030க்குள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு சாத்தியமே!

ஒயிட் காலர் Vs ப்ளூ காலர்:

உற்பத்தி, கட்டுமானம், தூய்மைப்பணி உள்ளிட்ட ப்ளூ காலர் தொழில்நுட்பம், மேலாண்மை, நிர்வாகம் போன்ற ஒயிட் காலர் வேலைவாய்ப்புக்களில் தான் பெரும்பாலானோர் குவிகின்றனர் என ஒரு ஆய்வு கூறுகிறது. நமக்கெலாம் சலவை கலையாமல் ஏ.சி.யில் அமர்ந்துகொண்டு, அனைவருக்கும் மேலாக வேலை பார்க்க வேண்டும் என்ற மனப்பாங்கு உண்டு. வீட்டிலும் நம்மை அப்படித்தான் சொல்லி சொல்லி வளர்த்திருக்கிறார்கள். கலைக்கல்வி பயின்றாலும், என்ஜினீயரிங் பயின்றாலும் இந்திய செம்மறி ஆடுகளைப் போல் எல்லோரும் வந்து விழுவதோ எம்.பி.ஏ. என்னும் மகா குட்டையில்தான். எம்.பி.ஏ. படித்துவிட்டால் போதும், ஒரு நிறுவனத்தில் நிர்வாகப் பணி கிடைத்துவிடும். உட்கார்ந்துகொண்டே வேலை பார்க்கலாம் என்ற பரந்த உள்ளம்தான் இப்போது ஏற்பட்டிருக்கக் கூடிய வேலையின்மைக்கு மிக முக்கியமான காரணம். இப்போதிருந்தே தொழில் மற்றும் உறபத்தி துறையில் மிக அதிகமான கவனம் செலுத்தினால் மட்டுமே இந்தியாவால் 2030க்குள் வேலையில்லா திண்டாட்டத்தை கட்டுப்படுத்திட முடியும். ஆனால் மரபுசார் வேலை வாய்ப்புகளிலோ அல்லது உற்பத்தி துறையிலோ உடல் உழைப்பை செலுத்தி உழைத்திட நம்மில் யாரும் தயாராக இல்லை. 15% ஜி.டி.பி. ஈட்டும் நாட்டில் 11% வேலைவாய்ப்பு மட்டுமே உருவாக்கப்படிருக்கிறது மக்களே, புரிந்துகொள்ளுங்கள்.

இளைஞர்கள் இதை செய்தால் 2030க்குள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு சாத்தியமே!

கல்வி சீர்திருத்தம் தேவை:

நாட்டின் பொருளாதார துறையை விட முன்பாக சீரமைக்கப்பட வேண்டிய மிக முக்கியமான துறை கல்வித்துறைதான். பழைய பண்டைய அறிஞர்கள் எழுதி வைத்துச் சென்ற உரைநடை புராணங்களையே இன்றளவும் நாம் பிடிவிடாமல் படித்துக் கொண்டும், மனப்பாடம் செய்துகொண்டும், மதிப்பெண் அரசியலை நடத்திக்கொண்டிருக்கிறோம். காலங்கடந்து சென்ற அனுபவங்கள், இலக்கணப் பொருட்கள் மற்றும் உரைநடை என இக்காலத்திற்கு சற்றும் தேவையில்லாத கல்வியை பல லட்சங்களை கொட்டி பயின்று வருகிறோம். இன்னும் குறிப்பாக கவனித்தால், எஞ்சினியரிங் மற்றும் எம்.பி.ஏ. மாணவர்களின் நிலை வேடிக்கையானது. எம்.பி.ஏ. படிக்கும் மாணவர்கள் TANSAT எழுதி தமிழகத்தினுள் ஏதேனும் ஒரு கல்லூரியில் சீட்டு பிடித்து விடுகின்றனர். தேசிய அளவில் நடத்தப்படும் CAT தேர்வை அவர்களில் பலரும் எதிர்கொள்வதில்லை. காரணம் பயம். அதுமட்டுமின்றி தமிழகம் எனப்படும் Comfotable Zoneஐ கடந்து செல்ல விருப்பமும் இல்லை.

மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் கல்வித்துறைக்கான முக்கியத்துவத்தின் விழுக்காடும் வருடத்திற்கு வருடம் குறைந்து வருகிறது. 2013-2014ம் ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கல்விக்காக 4.54 விழுக்காடாக இருந்தது. 2016-2017ம் ஆண்டில் கல்வித்துறைக்கான ஒதுக்கீடு 3.65ஆக குறைந்துள்ளது. நடப்பாண்டில் 3.71 விழுக்காடு என மிக சொற்பமான அளவே அதிரிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி பாடத்திட்டங்களில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். மாணவர்களை சுயசிந்தனை கொண்டவர்களாகவும், சுவ வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொள்பவர்களாகவும் உருவாக்கும் நுட்பம் வாய்ந்த கல்விமுறையை வகுக்க வேண்டும். இந்த முறை இல்லாத காரணத்தினால்தான் இன்றைய பட்டதாரிகளில் பெரும்பாலானோர் வேலையில்லா பட்டதாரிகளாக வெளிவருகின்றனர்.

உழைப்பே உயர்வு:

ஏற்கெனவே சொன்னதைப் போல ப்ளூ காலர் பணிகளுக்குச் செல்வதை நம்மில் பலரும் ஒரு அவமானமாக கருதிக் கொண்டிருக்கின்றோம். ‘மடிமை குடிமைக்கண் தங்கித்தன் அடிமை புகுத்தி விடும்”, அதாவது சோம்பேறித்தனம் என்பது மனிதனை பகைவர்களுக்கு அடிமை ஆக்கிவிடுமாம். இதேதான் இந்தியாவில் இன்று நடந்து வருகிறது. சர்வதேச அளவில் தொழில்நுட்பத்தை அதிகம் நாடிச்செல்லும் நாடாக இந்தியா திகழ்ந்தாலும், முதலாளித்துவ நாடுகளுக்கு அடிமையாகும் பழக்கத்தையும் இந்தியாவின் பிரதிநிதிகள் பெற்றிருக்கின்றன. உடல் உழைப்பை முதலீடாக இட தயாராகத இளைஞர்கள் இருக்கும் பட்சத்தில்தான் அவர்களை ஏ.சிக்கு கீழ் உட்கார வைத்து, சாப்பிட நொறுக்குத் தீனிகள் கொடுத்து, அவர்கள் கேட்ட சம்பளத்தையும் கொடுத்து தங்கள் நாடுகளுக்கு லாபத்தை அள்ளிச் செல்கின்றன பல முதலாளித்துவ நிறுவனங்கள். டாலர் மதிப்புடன் ஒப்பிடும்போது இந்திய ரூபாய் என்பது அவர்களுக்கு சில்லறை வகையறாதான். இயன்றவரை அள்ளிக் கொடுத்துவிட்டு, பாக்கெட் காலியானதும் தங்களுக்கான இந்திய சந்தையை மூடிவிட்டு சென்று விடுவார்கள். அங்கே பணிபுரிந்த நமது பணியாளர்கள் அடுத்த நிறுவனத்தின் வாசலில் நிற்கும் நிலையை அன்றாட பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்திய ஐ.டி பணியாளர்களின் நிலையில்லாத பணியிடம் அதற்கு மேலும் ஒரு சான்று. உடல் உழைப்பை செலுத்திட தயார் ஆனால் மட்டுமே இந்திய உற்பத்தி பொருட்களுக்கான சந்தை மதிப்பு உயரும். பல புதிய வேலைவாய்ப்புகள் பெருகும். இதனால் வேலையில்லா திண்டாட்டம் ஒழியும்.

இந்தியர்களின் பேராசை:

இந்தியாவில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு குடிமகனுடைய ஆசையும் ஒரு வேலைவாய்ப்பை பெறுவதுதான். அவனின் பேராசை என்பது அவனே இன்னொரு பகுதி நேர வேலைவாய்ப்பை பெறுவது. பார்ட் டைம் ஜாப். காரணம் அவனுக்கு நிறைய பணம் தேவைப்படுகிறது. பணத்தை குறியாக வைத்து செயல்படுவதை இங்கு குறையாக கூறவில்லை. ஒரு வேலைவாய்ப்பை பெற்றவர், தான் அடைய விரும்பும் பகுதிநேர வேலைவாய்ப்பை, வேலை கிடைக்காமல் இருக்கும் மற்றவர்களுக்காக விட்டுக்கொடுக்கலாம். இதைதான் பொதுவுடைமை என்பார்கள். அப்படி உங்களுக்கு பணம் செய்ய வேண்டிய நிர்பந்த சூழல் ஏற்பட்டால், சுய தொழில் மூலமாக பிழைக்கலாம். உதாரணமாக புகைப்படக் கலைஞர் ஆகலாம், கைவினைப் பொருட்கள் செய்யலாம், போட்டிக்யூ வைக்கலாம். இந்த தொழில்கள் எல்லாமே உங்களது உடல் உழைப்பை இயங்க வைக்கும். சுய முன்னேற்றத்தை பெற்றுத்தரும். சுய தொழிலில் உங்களால் மற்றவர்களுக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர முடியும். எனவே இந்த தலைமுறையினருக்கு பொதுவுடைமை மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது.

பயணங்களே ஆயுதம்:

“சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்…
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் எல்லாம் தமிழில் மொழிபெயர்த்திடல் வேண்டும்…
இறவாத புகழுடைய புதுத்தமிழ் நூல்கள் இயற்றல் வேண்டும்” என தேசியக்கவி பாடியிருக்கிறார். கடல் தாண்டி எட்டு திக்குகளுக்கும் சென்று வேலைவாய்ப்பையும், தொழில்நுட்பத்தையும் அடைவதற்கான இலக்குகளை கொண்டிருக்கும் இளைஞர்கள்தான் இந்நாட்டிற்கு தேவை. தொழிலறிவுகளை கற்றுவந்து அது கிடைக்காத இடத்தில் உள்ள மக்களுக்கு வழங்கச் செய்ய வேண்டும். அவைகளுக்கான கல்வியையும், நுட்பத்தையும், தொழில் அறிவையும் இந்நிலத்தில் விதைத்திட வேண்டும். ஒரு இளைஞன் எப்போது தனது உழைப்பிற்காகவும், வாழ்வியலுக்காகவும் பயணங்களை மேற்கொள்ள தயராகிரானோ அப்போதே அவனது எதிர்காலம் வன்னமயமானதாக மாற்றப்படும். வாழ்வியலின் அனுபவங்கள், கற்றல்கள் எல்லாம் உங்களுடைய பயணத்தின் ஆழத்தையும், நீளத்தையும் பொறுத்தே அமையும். வேலையில்லா திண்டாட்டங்கள் ஒழிய வேண்டும் என்றால் இந்த கணம் முதலே இந்தியாவின் ஒவ்வொரு இளைஞனும் பயணிக்கத் தயாராக வேண்டும். இப்பயணங்கள்தான் உங்களது நாட்டை பீடிதிருக்கக்கூடிய வறுமையை ஒழிக்கும் சக்தி வாய்ந்த ஆயுதம்.

உள்நாட்டு உற்பத்தி:

ஏற்கெனவே விவாதித்ததன் படி, நாட்டில் நமது வாழ்வியலை ஒட்டி வளர்ந்துள்ள தொழில்வளங்களை தொடர்ந்து மேற்கொள்ளவும், அவற்றை புதுப்பிக்கவும் நாம் தயாராக இல்லை. வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்து, பின் அடை வெறுத்து உதறிவிட்டு மீண்டும் தாய்நாடு வந்தவர்கள், விவசாயத்தில் இறங்கி வருகிறார்கள். பன்னாட்டு வேலைவாய்ப்பு பற்றியும், அதன் பின்னால் ஒளிந்திருக்கும் சர்வதேச அரசியல் பற்றியும் அவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். அதற்காக அவர்களுடைய உழைப்பு எவ்வாறு சுரண்டப்படுகிறது என்பதும் அவர்கட்கு புரிந்திருக்கும். இதனால் மட்டுமே மீண்டும் ஊர் வந்து இயற்கை விவசாயத்தை கையில் எடுத்திருப்பார்கள் அல்லது வாழ்வியல் சார் தொழில்களில் இறங்கியிருப்பார்கள். அவர்கள் மேற்கொள்ளும் இந்த தொழில்முறைதான் எதிர்காலத்தில் நாட்டின் ஒட்டுமொத்த பிரச்சினைக்கும் தீர்வுப்பாலம் அமைக்கும். கைக்குள் நெய்யை வைத்துக்கொண்டு வெண்ணெய்க்கு அலைந்த கதையாக, உள்ளங்கைக்குள் திறமையை வைத்துக்கொண்டு வேலைவாய்ப்பிற்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள் புதிய இந்தியாவின் பிள்ளைகள். உங்களது கை விரல்களையும் விரித்துப் பாருங்கள், அந்த பத்து விரல்களும்தான் உண்மையான மூலதனம். உடல் உழைப்பை வலியுறுத்துவதற்காக உங்களது உடலமைப்பில் பொருத்தப்பட்ட உன்னதமான கருவி அது.

மேற்சொல்லப்பட்ட குறைகளையும், அதன் நிவர்த்தி முறைகளையும் மெய்யாலும் மனதாலும் உணர்ந்து நடை போடத் தொடங்கும்போது வேலையில்லா திண்டாட்டம் நாலு கால் பாய்ச்சலில் இந்தியாவிலிருந்து ஓடிக்கொண்டிருக்கும். இன்றைய இளைஞர்களான நீங்கள் வலிமையையும், திறமையும், கூர்மையான அறிவையும் ஒருங்கே பெற்றவர்கள். சமூகஊடகங்களில் எண்ண ஓட்டங்களை பீய்ச்சியடிக்கும் நீங்கள், உங்களது தொழிலெண்ணத்தின் வழியே புத்தாக்க உணர்வுகளை பாய விடுங்கள். கடல் தாண்டி, மலை தாண்டி புதுப்புது வாய்ப்புகளை தேடிப் பெற்றிடுங்கள். உங்களது பயண வழி எங்கும் ‘டங்கல் டங்கல்’ என்று யுத்தப்பாட்டுடன் ஒவ்வொரு கணப்பொழுதையும் துடிப்பு மிக்கதாக மாற்றிக்கொண்டு எரிமலைப் பறவையாக பறந்திடுங்கள். இன்றைய இளைய சமூகம் நினைத்தால் முடியாத விடயம் ஒன்றுமில்லை என்பதற்குச சான்றாக நமது ஜல்லிகட்டிற்காக போராடி உலக மேடையில் ஒரு மாபெரும் வெற்றியை நிறுவியுள்ளோம். இவ்வெற்றியின் திடத்தை என்றும் இழக்காமல் பீடுநடை போட்டால் 2030க்கு முன்பாகவே கூட இந்தியாவின் வேலையில்லா தலையெழுத்தை அழிக்க முடியும். நீங்கள்தான் அழிக்க வேண்டும். உங்களால் முடியும். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?

என்றும் இளைய சமுதாயத்திற்கு வாழ்த்துக்களுடன், கட்டுரையாளர் அருண் மாதவன். Follow him on #Facebook

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here