உங்களது உறவு முறிய போகிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!

0
41

புதிதாக உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள நாம் எவ்வளவோ சிரமப்படுகிறோம். ஆனால் அந்த உறவு நமது வாழ்க்கையில் வந்த உடன் தான் அந்த உறவை தக்க வைத்துக் கொள்ள நாம் எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கும் என்பது பற்றி தெரிய வரும். நண்பர்கள், உறவுகள், கணவன், மனைவி உறவு, பிள்ளைகளின் உறவு, காதல் உறவு என அனைத்து உறவுகளையுமே தக்க வைத்துக் கொள்ள நாம் படாத பாடு பட வேண்டியுள்ளது என்பது தான் நிதர்சனம்.

Couple holding broken heart

உறவுகளை தக்க வைத்துக் கொள்ள சகிப்பு தன்மை இருக்க வேண்டியது என்பது மிக மிக அவசியம். அது மட்டுமின்றி, தியாகங்கள், பல வித உதவிகள் போன்றவற்றை செய்ய வேண்டியதும் அவசியம். ஆனால் என்ன தான் தலை மீது தூக்கி வைத்துக் கொண்டாலும், பல உறவுகளை நம்மால் வாழ்க்கையில் தக்க வைத்துக் கொள்ள முடிவதில்லை. நம் கையை விட்டு சென்றுவிடுகின்றன.

இதனால் நமக்கு வாழ்க்கையில் வெறுமையே ஏற்படுகிறது. உறவுகள் முறிந்து போக போகிறது என்பதை சில அறிகுறிகளை வைத்து அறிந்து கொள்ளலாம். இந்த பகுதியில் ஒரு உறவு முறியப் போகிறது என்பதை வெளிப்படையாக காட்டும் சில அறிகுறிகளை பற்றி காணலாம்.

மரியாதை குறைவாக நடப்பது

காதல் உறவோ, நட்போ இல்லை சொந்த பந்தங்களோ, எந்த உறவாக இருந்தாலும் மரியாதை என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். எப்போதும் போல இல்லாமல் மரியாதை குறைவாக நடப்பது, உங்களது மனம் புண்படும் மாதிரியாக நடந்து கொள்வது, அடிக்கடி தேவையில்லாத விசயங்களுக்காக உங்களுடன் சண்டை போடுவது போன்றவை உறவு முறிய போகிறது என்பதற்கான அறிகுறியாக அமையும்.

மனநிலை மாற்றம்

ஒரு குடும்பத்திலோ அல்லது கணவன் மனைவிக்கு இடையிலோ இருவரும் ஒரே மனநிலையுடன் இருந்தால் தான் உறவு ஆரோக்கியமானதாக இருக்கும். அவ்வாறு இல்லாமல் இருவரும் வெவ்வேறு மனநிலையில் அடிக்கடி இருந்து வந்தால், முரண்பாடுகள் அதிகரித்து உறவுகள் பிரியக் கூடும்.

அடிக்கடி சண்டை

உறவுகளுக்குள் ஏற்ற இறக்கங்கள் மற்றும் பல சண்டை சச்சரவுகள் இருப்பது என்பது சகஜமான ஒன்று தான். ஆனால் சண்டைகள் எப்போதுமே ஆரோக்கியமானதாகவும், முன்பை விட உறவை நெருக்கமாக்குவதாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும். ஆனால் தொடர்ச்சியான சண்டைகளும், காரணமே இல்லாமல் சண்டைகள் அடிக்கடி வருவதும், பேசாமல் இருப்பது போன்றவைகள் ஒருவர் மீது ஒருவருக்கு வெறுப்பை உருவாக்கி உறவுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும்.

நேரம் ஒதுக்குதல்

காதல், நட்பு, கணவன் – மனைவி உறவு, சொந்த பந்தங்கள் என எந்த உறவாக இருந்தாலும், அவர்களுக்கென தனியாக நேரம் ஒதுக்க வேண்டியது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். பேச வேண்டும் என்று நினைக்கும் போது நேரம் ஒதுக்காமல் இருப்பது, மேலும், உங்களது இன்ப துன்பங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாமல் போவது போன்றவைகள் உறவு முறிய போகிறது என்பதை வலிமையாக வெளிப்படுத்தும். அதுமட்டுமின்றி உறவுகள் இருப்பதே இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்வதற்கு தானே? அதுவே இல்லை என்றால் உறவுகள் எதற்கு?

காது கொடுத்து கேளாமை

ஒருவர் ஒரு விஷயத்தை சொல்லும் போது அதனை காது கொடுத்து கேட்க வேண்டியது என்பது அவசியமான ஒன்றாகும். ஆனால் உங்களது துணை உங்களது பேச்சை மதிக்காமலும், காது கொடுத்து கேட்காமலும் இருந்தால், அவருக்கு உங்களது உறவு ஃபோரடித்து விட்டது என்பதை உணர்த்தும். இது போன்ற அறிகுறிகள் தெரிந்தால் நீங்கள் உங்களது உறவிடம் சுமூகமாக பேச வேண்டியது அவசியம். உரிய நடவடிக்கையை சீக்கிரமாக எடுக்காவிட்டால் உறவு முறிந்து விட கூடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here