காண்டாமிருகத்தின் கொம்புகளில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா?

0
353

கடந்த மார்ச் முப்பதாம் தேதி, உலகின் கடைசி வெள்ளை காண்டாமிருகத்தின் அழிவினை உறுதி செய்துவிட்டு இறந்தது சூடான் என்னும் வடக்கு வெள்ளை காண்டாமிருகம். பொதுவாக ஆப்பிரிக்க கண்டம் தான் உலகின் 75% காண்டாமிருகங்களை கொண்டிருக்கின்றது. உலகத்தில் மொத்தம் 27000 காண்டாமிருகங்கள்  தான் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளை காண்டாமிருகங்கள்:
வெள்ளை காண்டாமிருகங்கள் அழிவிற்கு மட்டுமின்றி மற்ற காண்டாமிருகங்களின் அழிவிற்கும் காரணம், அதன் கொம்புகள் தான். இந்த கொம்புகளின் மூலக்கூறுகளை பயன்படுத்தி புற்றுநோய் போன்ற கொடிய நோய்களையும் குணப்படுத்த இயலும் என்று சீனா மற்றும் வியட்நாமிய மக்கள் நம்புகின்றார்கள். வேடிக்கை என்னவென்றால் அதன் கொம்பில் இருக்கும் அதே மூலக்கூறுகள் தான் நமது தலை முடியிலும், நகங்களிலும் இருக்கின்றன.  அதனால் அதை அதிக விலை கொடுத்து வாங்க முன் வருகின்றார்கள் இம்மக்கள். சுமார் 60000$ வரை அதன் விலை இருக்கின்றது.

கொம்புகளில் பணம்:
வெள்ளை காண்டாமிருகங்களின் கொம்புகள் சுமார் நான்கிலிருந்து ஐந்து கிலோ வரை இருக்கும். வெள்ளை காண்டாமிருகங்கள் 60களில் 3000 ஆக குறைந்து போனது. அடுத்த 15 வருடங்களில் வெறும் 15 விலங்குகளே மிஞ்சியது. இறுதில் இரண்டு பெண்களான நஜீனையும், ஃபட்டுவையும் விட்டுவிட்டு சூடான், இந்த இனத்தின் அழிவினை உறுதி செய்துவிட்டு இறந்துவிட்டது. தொடர்ந்து காண்டாமிருகங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை கவனத்தில் கொண்டு வந்து, ஆப்பிரிக்க அரசாங்கம், காண்டாமிருகங்களின் கொம்புகளை விற்பனை செய்வதை தண்டனைக்குரிய  குற்றமாக அறிவித்து தடை விதித்தது.

பண்ணைத் தொழில்:
இதனால், ஆப்பிரிக்காவில் இருக்கும் பெரும் செல்வந்தர்கள் காண்டாமிருகங்களை பண்ணைகளில் வைத்து வளர்க்கத் தொடங்கினார்கள். காண்டாமிருகங்களின் கொம்புகள் வளர்ந்து கொண்டே இருப்பவை. உலகில் அதிக அளவு காண்டாமிருகங்களை வளர்க்கும் (1300) ஜான் ஹூயூம் என்பவர், தன்னுடைய பண்ணையில் இருக்கும் காண்டாமிருகங்களின் கொம்புகளை 20 மாதங்களுக்கு வெட்டி எடுத்து பாதுகாத்து வருகின்றார் இதன் மூலம் அவருக்கு தோராயமாக 45மில்லியன் டாலர் அவருக்கு பணமாக கிடைக்கும். இங்குள்ள அனைத்து காண்டாமிருகங்களையும் பாதுகாப்பது அப்பண்ணையின் முக்கிய பொறுப்பாகும். காடுகளிலும் தேசியப் பூங்காக்களிலும் நடைபெறும் வேட்டை போல், இந்த பண்ணைகளில் நடைபெறுவது  என்பது நிகழாத காரியம். காரணம், அங்குள்ள மிருகங்கள் அனைத்தையும் ஆயுதமேந்திய பாதுகாப்பு படையினர் பாதுகாத்து வருகின்றனர். அப்பண்ணையில் அவ்விலங்குகளுக்கு தனி மருத்துவ குழுவும் இருக்கின்றது.

மக்னா யானைகள்:
மக்னா யானைகள் பற்றி கேள்விபட்டிருக்கின்றீர்களா? தந்தங்கள் இல்லாத ஆண் யானைகள் மக்னா யானைகள் என்று அழைக்கப்படுகின்றன. இனப்பெருக்க காலங்களில், பெண் இணையை தேர்ந்தெடுப்பதில் ஆண் யானைகளுக்கு நடுவில் சண்டைகள் இருக்கும். தந்தங்கள் இல்லாத ஆண் யானைகளுடன் மற்ற யானைகள் சண்டையிடாது. அதே போல், பெண் யானைகளும், அந்த யானைகளை தேர்வு செய்யாது. கொம்புகளும் தந்தங்களும் ஒவ்வொரு இனத்தின் இடம் சார்ந்த மற்றும் இனம் சார்ந்த போட்டிகளுக்கு ஆயுதமாக இருப்பவை. வேட்டையாடுதல் நிகழ்த்தப்படும் போது இதன் நிலை வேறாக இருக்கின்றது. இதுவும் ஒரு வகையில் இன அழிப்பினை உறுதி செய்யும் காரணிகளாகின்றன.

 

பாதுகாப்பு நடவடிக்கைகள்:
செக் குடியரசு நாட்டிற்கு சொந்தமான சர்க்கஸ் கம்பெனியில் காட்சி விலங்காக வைக்க ஆப்பிரிக்க காடுகளில் இருந்து பிடித்துவரப்பட்ட 6 காண்டாமிருகங்களில் ஒன்று. அப்போது அதன் வயது சுமார் 2. அதனை அந்த கம்பெனியில் இருந்து பாதுகாத்து, துர்வ் கர்லோவ் உயிரியல் பூங்காவில் வளர்த்து வந்தார்கள். இயற்கை வெளியில் வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் 2009ஆம் ஆண்டு, ஆப்பிரிக்காவின் மத்திய கென்யாவில் இருக்கும் ஒல் பெஜட்டா தேசிய பூங்காவில் வைத்து வளர்த்தார்கள். அதன் உயிருக்கு தொடர்ந்து வேட்டைக்காரர்களால் அச்சுறுத்தல் இருந்து வந்ததால் 2011ம் ஆண்டிலிருந்து நான்கு நிரந்தர பாதுகாவலர்களை நியமித்தது கென்ய அரசாங்கம்.

இறுதி அஞ்சலி:
சூடானின் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அதனால் இணை சேர இயலவில்லை. இதனை கருத்தில் கொண்டு, அதன் உயிரணுக்களை பாதுகாத்து வைத்திருந்தனர் ஒல் பெஜட்டா குழுவினர். ஆனால், செயற்கை கருத்தரித்தல் முறையில் ஒரு காண்டாமிருகத்தினை உருவாக்க பத்து வருடங்கள் ஆகும். இந்த ஆய்வுக்கு சுமார் 10 மில்லியன் டாலர்கள் தேவைப்படுவதால், நிதி சேகரிப்பதற்காக உலகப் புகழ்பெற்ற டேட்டிங் ஆப்பான டின்டெரில் சூடானிற்கு ஒரு புரொபைல் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் இழப்பினை எதைக் கொண்டும் ஈடு செய்ய இயலாது. அதன் இறப்பினை தொடர்ந்து அரசாங்க மரியாதையுடன் சூடானின் உடல் அடக்கம் செய்யப்பட்டு கென்யாவின் தேசிய கீதம் பாடப்பட்டது. பின்னர் அதன் நினைவிடத்தில் சூடானின் விருப்ப உணவான கேரட் வைத்து இறுதி அஞ்சலி செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here