சிறுகதை: நெடுஞ்சாலைக் கனவு [உண்மைச் சம்பவம்]

0
224

9 நிமிட வாசிப்பு

 

28/01/2018 ஞாயிற்றுக் கிழமை காலை 7 மணி 30+ நிமிடங்கள்

சேலம், குரங்குச் சாவடி, சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக எனது REயில் பெங்களூருவை நோக்கி சென்றுகொண்டிருந்தேன். சரியாக ஐயப்ப ஆசிரமத்திற்கு முன்பாக வந்தபோது, வலது பக்கத்தில் உள்ள மேம்பாலத்தின் அடியில் இருந்து எதிர்பார்க்காத நேரத்தில் ஒரு ஸ்கூட்டி வளைந்தது. இண்டிகேட்டர் போடவில்லை. மூன்றடி தூரத்தில்தான் இருக்கும். ஹார்ன் எழுப்பினேன், இருந்தாலும் பலன் கிடைக்கவில்லை. ஸ்கூட்டி வேகமேடுக்கவில்லை. ப்ரேக் அழுத்தியும் பலனில்லை. அறுபது வேகத்தில் இயங்கிய என் ஆஜானுபாகுவான வண்டி, கண் இமைப்பதற்குள் ஸ்கூட்டியை புரட்டிவிட்டு தானும் தடம்புரண்டது. கீழே விழும் அக்கணம் என் தேகமெங்கும் சுற்றிய உயிரோட்டம் ஒட்டுமொத்தமாக ஹெல்மெட்டுக்குள் வந்து சேர்ந்திருந்ததைப் போல உணர்ந்தேன். என் உயிர் கண்களுக்குள் ஒளிந்துகொண்டு எனக்கு முன்னால் விழுந்திருந்த அந்த பெரியவரை படபடப்புடன் பார்த்துக்கொண்டிருந்தது. அவர் மெல்ல எழுந்து அமர்ந்தார். எங்கிருந்தோ ஓடி வந்தவர்கள், அவரை எழுப்பி சாலையோர கிழவிக்கடை கல்லில் அமர வைத்து, தண்ணீர் கொடுத்தனர்.

சக்கரத்திற்கு அடியில் மாட்டிக்கொண்டிருந்த என் வலது காலை பத்திரமாக மீட்டெடுத்து, வேகவேகமாக ஓடினேன். வயதானவர் பாவம். சர், என்னாச்சி சர்? எங்க அடிபட்டிருக்கு? என்றேன். பெருமூச்சு வாங்க, தெரியலைங்க என்றார். தன்னுடைய பேண்ட்டை கூட சற்று தூக்கிப்பார்க்க திடமில்லாத நிலையில், அவரைப் பார்த்து கலங்கி நின்றேன். சுற்றியிருந்தவர்கள் சிலர் உதவியுடன் வண்டி ஓரங்கட்டப்பட்டது. சிலர் அந்த பெரியவரை திட்ட ஆரம்பித்தனர். வாக்கி டாக்கி சத்தம் நெருங்கியது. போலீஸ் ஏட்டு வந்துகொண்டிருந்தார். நிகழ்ந்ததை என்னிடமும், அந்த வயதானவரிடமும் கேட்டறிந்தார். அடுத்த சில வினாடிகளில் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் இருந்து புகார் பதிவர் வந்தார். நிலைமையை கேட்டறிந்தார். அவ்வளவு தாழ்மையான நிலை இல்லை. இருதரப்பினரும் ஓரளவு அமைதியாகவே உள்ளனர். இரு வாகனங்களிலும் சேதாரம் ஏதும் இல்லை. எனவே சம்பவத்தின் வீரியம் சற்று தணிந்தது.

அவர் என்னிடம் வந்து, சர், நீங்க ஏதாவது கம்ப்ளைன்ட் கொடுக்குற விரும்புறீங்களா?
வேண்டாம் சர்.
இல்ல, பிரச்சினை அந்த அளவுக்கு பெருசு கிடையாது. ரோட்ல இதெல்லாம் சகஜம்தான் என்றேன்.

பெரியவரிடம் சென்றார். சர், உங்களுக்கு எங்க அடிப்பட்டிருக்கு? மயக்கம் வருதுங்களா? நடக்க முடியுமா?
தெரிலைங்க. என் பொண்ணுக்கு ஃபோன் பண்ணியிருக்கேன். வந்துடுவாங்க.
அதற்குள் ஏட்டய்யா அழைப்பின்படி, 108 ஆம்புலன்ஸ் வந்து நின்றது. அது எழுப்பும் ஒலி என்றால் எனக்கோ அலர்ஜி. மனசை பயமும், பதற்றமும் தொற்றிக்கொண்டது. படபடப்பாக நின்றுகொண்டிருந்த நேரத்தில் அந்த பெரியவரின் மகளும், அவரது உறவினரும் சம்பவ இடத்தை வந்தடைந்தனர்.

அப்பாவை பார்த்துவிட்டு, நேராக என்னிடம் வந்தார் அந்த பெண். ஏன் தம்பீ? என்றார். நிகழ்ந்ததை விவரித்தேன். அப்பா இன்னும் சற்று கவனமாக வந்திருந்தால் இவ்விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும் என்றேன். இயன்றவரை அவர் மீது குற்றம் சுமத்த விடாமல் என் மனதை தடுத்து நிறுத்தியிருந்தேன்.

இடையில் சில மனிதர்கள், இவ்விபதை தனக்கு சாதகமாக, தனது லாபநோக்கதிற்காக கையில் எடுத்தனர். மஃப்டியில் வந்திருந்த வழக்கறிஞர் பெருமக்கள் இருவர், என் மூளையை இழுத்துப்போட்டு சலவை போடத் தொடங்கினர்.

தம்பீ, என் மகன் மாதிரி இருக்க. உன் மேல தப்பே இல்ல. அவங்க காசு கேட்டா தந்துடாதீங்க. எந்த செலவையும் ஏதுக்காதீங்க. அப்படி கேட்டாங்கன்னா, எனக்கு ஒரு கால் பண்ணுங்க. கேஸ் போட்ரலாம். என் பையனுக்கு நடந்திருந்தா நா சும்மா விடுவனா? என்னா சார், நம்ம பையனுக்கு இது நடந்திருந்தா நாம வேடிக்கை பாப்போமா சொல்லுங்க, என பக்கத்தில் நின்ற ஏட்டிடம் கேட்க, முடியாது சார், அது எப்புடிங்க என பதில் வந்தது.
அந்த பெரியவரின் மகளிடம் அந்த மாமேதை வாக்குவாதம் செய்யத் தொடங்கினார். கூட்டத்தில் கோவிந்தா, பின்பாட்டெல்லாம் பாடினர் சிலர்.

குறுக்கிட்ட நான், சர், ஒரு நிமிஷம் என்றேன், அவர் குறுக்கிட்டு தம்பி என்னோட நம்பர் சேவ் பண்ணிக்குங்க. போன் எடுங்க தம்பீ. சர், ஸ்டாப் இட் ப்ளீஸ். நான் மீடியாலதான் ஒர்க் பண்றேன். இதுல பாதிக்கப்பட்டவங்க அமைதியா இருக்காங்க. இந்த பிரச்சினைய தீத்துக்க எனக்கு தெரியும். நீங்க யாரு நடுவுல? என்றேன்.

சரி சரி, மீடியாவா? அப்பனா உங்களுக்கு எல்லாமே தெரியுமே!! தம்பீ என்பது சார் என மாறிவிட்டது. சரிங்க சார் நீங்க பாத்துக்குவீங்க என சொல்லிவிட்டு மறைந்தது அந்த மாயமான்.

அதற்குள், அம்புலன்ஸில் ஏற்றப்பட்டிருந்தார் அந்த பெரியவர். அவரது குடும்பத்தினரின் விருப்பப்படி, எஸ்.கே.எஸ். ஹாஸ்பிட்டலுக்கு விரைந்தது ஆம்புலன்ஸ். நானும் எனது வண்டியை எடுத்துக்கொண்டு ஆம்புலன்ஸை பின்தொடர்ந்தேன். அதற்குள் சேலத்தில் இருக்கும் எனது கல்லூரிக்கால நண்பர்களிடம் பேசி நேராக ஹாஸ்பிட்டலுக்கு வருமாறு அழைத்திருந்தேன்.

ஆம்புலன்ஸில் இருந்து வில் சேர் மூலம் முதலுதவி சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச்செல்லப்பட்டார் அந்த பெரியவர். நானும் உள்ளே சென்றேன். டாக்டர் வந்துதான் அந்த பெரியவரின் இடது கால் பேண்ட்டை சற்று மேலே தூக்கிப் பார்த்தார். லேசான சிராய்ப்பு காணப்பட்டது. முதலுதவி செய்யப்பட்டது.

வெளியில் வந்ததும், அவரது மகள் என்னிடம் பேசத் தொடங்கினார்.
வாட்ஸ் யுவர் ஸ்வீட் நேம்?
அருண் மாதவன் என்றேன்.

அப்பா, லாஸ்ட் டூ டேஸ் சரியா தூங்குல. ஸ்கூல் ஏனிவலுக்காக நைட்டெல்லாம் வொர்க் பண்ணியிருந்தாரு. காலைல வழக்கமா மாஸ்க் போவோம். ஆனா இன்னிக்கு அவரு மாஸ்க் வரலன்னு சொல்லிட்டு தூங்கிட்டாரு. அதனால் ரொம்பவே டயர்ட் ஆகியிருந்தாரு.

கவலைப்படாதீங்க, அப்பாவ நாங்க பாத்துக்குறோம். உங்ககிட்ட பணம்லாம் ஏதுவும் கேக்கமாட்டேன். போலீஸ் கேஸ்லாம் வேணாம். எங்களுக்கு எங்க அப்பா இருந்தாலே போதும். அவருக்கு ஒன்னும் ஆகாது. குழந்தை மாதிரி அவரு.
நீங்க பேங்களூர் போகணும். நீங்க கிளம்புங்க தம்பி. நாங்க பாத்துக்குறோம். நீங்க பத்திரமா போய் சேர்ந்துட்டு எனக்கு கால் பண்ணி சொல்லுங்க என்றார்.

சரிங்க, நான் சார பாத்துட்டு கிளம்புறேன் என்றேன்.
சரி போய் பாத்துட்டு வாங்க.

உள்ளே ஒரு படபடப்புடன் போய் நின்றேன். பக்கத்தில் நின்று, சர், இப்ப வலி எப்படி இருக்கு? வேற எங்கயாவது அடி பட்டிருக்குங்களா? என்றேன். தெரியலங்க. டாக்டர் ஸ்கேன் எடுக்க சொல்லிருக்காரு.

ரொம்ப சாரி சர், என்னை மன்னிச்சிடுங்க என நெஞ்சில் கை வைத்து தலை தாழ்த்தினேன். அவர் என் கையை பிடித்தார். “காட் ப்ளஸ் யூ” நீங்க பத்திரமா பெங்களூர் போய்ட்டு வாங்க. மெதுவா வண்டி ஓட்டுங்க என்று அந்த மனிதர் அந்த நேரத்தில் சொல்கிறார். ஸ்தம்பித்து போனேன். நெஞ்சுக்குள் மாமழை பொழிகிறது.

தான் நோகிய நேரத்திலும் அந்த மனிதருடைய வாயில் இருந்து பிறந்த இந்த வார்த்தையை நான் என் காதில்தான் கேட்கிறேனா? நடப்பவை நிஜமா? கனவா? போலொரு உணர்வு. நம் மனிதர்கள் கோபக்காரர்கள் ஆயிற்றே, சிக்னலில் நிக்கும்போது லேசாக பின்னிருந்து மோதினாலே சங்கத்தமிழ் பாடுவார்களே… குடும்பத்தையே நடுத்தெருவுக்கு இழுத்துவந்து திட்டுவார்களே… ஆனால் இந்த மனிதர் என்னை ஆசீர்வாதித்துக் கொண்டிருக்கிறார்.

கடவுளின் நேரடி ஆசீர்வாதமாக ஏற்றுக்கொண்டு அங்கிருந்து விடைபெற்றேன். இது என் வாழ்க்கையில் நான் சந்தித்த முதல் விபத்து என்பதால் நன்றாகவே பயந்துவிட்டேன். கல்லூரிக்கால பறவைகளுடன் தேநீர் அருந்திவிட்டு, மீண்டும் பயணத்தை தொடர்ந்தேன். சேலம் எல்லையை தாண்டுவதற்குள் அம்மாவிடம் இருந்து அழைப்பு வருகிறது.

கண்ணே, எங்க போயிட்டு இருக்க?
தர்மபுரிக்கிட்ட இருக்கேன் மா… ஏன் ம்மா?
ஒண்ணுமில்ல தங்கம், பாத்து நிதானமா ஓட்டிட்டு போ தங்கம்…
நீ கிளம்புனதுக்கு அப்புறம் கொஞ்சம் அப்படியே கண்ணசந்தேன், கனவுல நீ ‘அம்மா’ன்னு அபயக்குறல்ல கத்துன. அதுக்குதான் சொன்னேன். பாத்து மெதுவா ஓட்டிட்டுப் போ கண்ணு. குலதெய்வத்த வேண்டிக்கோ.
சரி ம்மா.. நா மெதுவாவே ஓட்டுறேன்.
கிருஷன்கிரி தாண்டுனதும் ப்ரேக் ஃபாஸ்ட் சாப்பிடுவேன். அப்போ நான் கால் பண்ணுறேன் மா..
சரி கண்ணு, வச்சிரு வச்சிரு…
(‘தாய்க்கு எப்படியும் கடவுள் கம்யூனிகேட் பண்ணிடுவான் போல’…) கிக் ஸ்டார்ட் அடித்து வண்டியை கிளப்பினேன்.

கிருஷ்ணகிரியில் சாப்பிட்டுக்கொண்டே அம்மாவிடம் நடந்ததை சொல்கிறேன். என்னை விட அதிகமாக பயம். எப்படியும் கூலாக பேசி சரிசெய்துவிட்டேன். அங்கிருந்தபடி நண்பனிடமும் பேசினேன். உனக்கு ஏதோ பெரிய ஆபத்து காத்திருந்திருக்கு. அத கடவுள் விரும்பல. அதான் அவனோட சன்னிதானத்துக்கு முன்னாடியே உன்னை சிறு விபத்துல சிக்க வச்சி, கடைசில பாதிக்கப்பட்டவர் வாயில இருந்து ஆசீர்வாதத்தையும் வாங்கிக் கொடுத்திருக்கார். நம்மால் விபத்துல அடிபட்டு படுத்திருப்பவர் ஏன் உன்னை ஆசீர்வதிக்கணும்? இது எல்லாத்துக்கும் மேல் ஒரு சக்தி இருக்குன்னு இப்போவாது தெரிஞ்சிக்க முடியுதுல்ல.

இது எல்லா மனிதர்களோட வாழ்க்கையிலயும் நடந்துடாது. நீ எங்கயோ, யாருக்கோ, எப்பவோ ஏதாவது அறம் செஞ்சிருக்க. நல்லது நெனச்சிருக்க என்று சொல்லும்போது வேலட்டில் இருக்கும் அந்த ‘ஆர்கன் டோனர்’ கார்ட்டை வருடிக் கொண்டிருந்தேன்.

பெங்களூரு வந்ததும் போன் செய்து விசாரித்தேன். அந்த சகோதரி மீண்டும் கனிவாகவே பேசினார். என்னப்பா, பத்திரமா பேங்ளூர் போய் சேந்துட்டியா? உனக்கு எங்கயாச்சும் அடிபட்டிருக்கா? மறைக்காத சொல்லு.
வந்துட்டேன் சிஸ்டர், அப்பாக்கு என்ன சொன்னாங்க? எப்படி இருக்காரு?
அவருக்கு லேசா ஃப்ரேக்ச்சர்தான் ப்பா. சீக்கிரம் குனமாகிடுமாம். பேன்ட் போட்டுவிட்டு வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. பத்து நாளுக்கு ஸ்கூல்க்கு லீவ் அப்ளை பண்ணிருக்காரு.
சரிங்க சிஸ்டர்…
அப்பா ஸ்கூல் ஹெட் மாஸ்டரா இருக்காரு தெரியுமா? ஆத்தரும் கூட. நிறைய புக்ஸ் எழுதியிருக்காரு. தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் பாடத்திட்ட வடிவமைப்பாளர். +1, +2 பசங்க படிக்குற புக்கெல்லாம் அப்பா எழுதினதுதான் என்றதும் பேராச்சரியம், அதே நேரத்தில் கடுமையான மனவருத்தம்.

ரொம்ப வருத்தமா இருக்குங்க. என்னால யாருக்கும் எந்த தீங்கும் ஏற்படாம பாத்துக்குவேன். என்னை பாத்து திட்டுனாலும், அடிச்சாலும் கூட பேசாம வந்துடுவேன். யாரையும் புண்படுத்துனது கிடையாது. ஆனா இன்னிக்கு அந்த ஆண்டவன் என்னால ஒரு விபத்தை ஏற்படுத்தி, பாதிக்க வச்சிட்டாரு.
அப்பா சீக்கிரம் குணமாகிடுவார். என்னோட ப்ரேயர்ஸ் உண்டு.

ம்ம்மம்மம்ம்ம்ம்….. தேங்க்ஸ் அருண்.
உனக்கு ஏதாது அடிபட்டுச்சா?

எனக்கு அடி ஏதும் படுல. லேசா முழங்கால் வலிக்குது, வீக்கம் எதுவும் இல்ல.
ஐஸ் கட்டி வைத்து ஒத்தடம் கொடுப்பா. இப்பவே கொடுத்துட்டா வலி இருக்காது.
சரிங்க சிஸ்டர்,

சரி அருண், ஹெல்த்த பாத்துக்கோ, நல்லா சாப்பிடு… அடுத்த முறை சேலம் வரும்போது கண்டிப்பா நீ எங்க வீட்டுக்கு வரணும்.
ஷ்யூர் சிஸ்டர், கண்டிப்பா வருவேன். அம்மா-அப்பாவையும் கூட்டிட்டு வருவேன்.
கண்டிப்பா அருண்…

சரிங்க சிஸ்டர், பாய்… சீயூ…
பாய் அருண்… சீயூ…!!

[என் திருமணப் பேச்சை எடுக்கும் அளவிற்கு எங்களுடைய நட்பு இன்று, இந்த 3 தினங்களில் வளர்ந்திருக்கிறது]

பயணங்கள் நம் வாழ்க்கையில் பல பாடங்களையும், புதிய அத்தியாயங்களையும் வழங்கும் என நம்புபவன் நான். பல பயணங்களின் அழகியலை மனதார இதமாக அனுபவித்துள்ளேன். ஆனால் இந்த ஒரு பயணம் மிக அபாயமான, ஆச்சரியமான அனுபத்தை கலந்து கொடுத்திருக்கிறது. அதுமட்டுமா? அழகான மனிதர்களை அடையாளம் காட்டியிருக்கிறது. அவர்களின் வாழ்வியலை உணரச் செய்திருக்கிறது. மனிதநேயத்தை நான் நேர்பட கண்டதில்லை. சென்னை வெள்ளத்திலும், தைப்புரட்சியிலும் செழித்த மனிதநேயத்தைக் கூட நேரில் நான் பார்த்ததில்லை. ஆனால் இன்று அதன் முழு தரிசனத்தையும், ஆசீர்வாதத்தையும் அனுபவித்திருக்கிறேன். அதன் கருணாகர வெள்ளத்தில் நனைந்து திளைத்திருக்கிறேன். எப்போது அடுத்த புதிய மனிதரை சந்திக்கப் போகிறேன் என்பதில் இறைவன் எப்படி ட்விஸ்ட் வைத்திருக்கிறான் என்பதை எண்ணி வியப்படைந்து வாழ்கிறேன். நம் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட சக்தி நம்மை எங்கே கடத்திச் செல்லப்போகிறது என்பதை அறியமுடியாமல் மயிர்கூச்சரிகிறது.

புதிய மனிதர்களின் உறவுப்பாலங்களில் நான் மீண்டும் மீண்டும் பயணிக்கப் போகிறேன்.
செம்மையான சிந்தனைகளுடன்…
கள்ளமில்லா காதலுடன்….!! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here