கிட்னி மட்டுமில்லை அப்பாவி பெண்களின் கற்புக்கும் குறி வைக்கும் கந்துவட்டி ராஜாக்கள்!

0
433

கந்துவட்டிக் கொடுமைகளுக்கு உள்ளாகும் அப்பாவிகளின் கிட்னி மட்டுமின்றி அவர்கள் வீட்டுப் பெண்களின் கற்பையும் சூறையாடி வருகின்றனர் கந்துவட்டி வசூலிக்கும் அரக்கர்கள்.

சீரழிக்கப்படும் பெண்கள்:

வட்டிக்கு பணம் கொடுக்கும் வள்ளல்களின் வியாபார அம்பு, கடன் வாங்கிய அப்பாவிகளின் வீட்டில் உள்ள பெண்களையும், பெண் குழந்தைகள் மீதும்தான் பாய்கிறது. பணத்தை கொடுத்துவிட்டு பாயை விரித்துக் கொண்டிருக்கிறார்கள் கந்துவட்டிக்காரர்கள். வீட்டில் பெண்பிள்ளைகள் இருந்துவிட்டால் அவர்களை மனசாட்சியே இல்லாமல் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாக்குகிறார்கள். கிராமங்கள் மட்டுமல்ல நகர்ப்புறங்களிலும் கந்துவட்டி கொடுமையில் இருந்து மீள கற்பை விட்டுக்கொடுத்த பெண்களும் உள்ளனர். இடத்திற்கு தகுந்தார் போல இந்த பெண்கள் சந்தை நடந்துகொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

கிட்னிக்கு குறி:

வாங்கிய கடனை உரிய நேரத்திற்குள் அடைக்க முடியாத ஏழை மக்களை கீழ்த்தரமாக மிரட்டுகிறார்கள். அவர்களின் உடமைகளை எடுத்துச் செல்கிறார்கள். கந்துவட்டிக்காரர்களின் கூலிப்படை குண்டர்கள் வீடுகளை சூறையாடுகிறார்கள். பணம் வரவில்லை என்றால் தன்னிடம் உள்ள கிட்னி விற்கும் ஏஜெண்ட்டை அனுப்பி பிரைன்வாஷ் செய்து அப்பாவி மக்களை மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்து ஒரு கிட்னியை திருடி, அதை பெரும் விலைக்கும் வேற்று காசு பார்க்கிறார்கள். திருட்டுத்தனமாக கிட்னி விற்க தகுந்த டாக்டர்கள், ஏஜென்ட்கள், அதை வாங்கும் பார்ட்டிகள் என எல்லா செட்டப்களும் பக்காவாக இருக்கிறது. இந்த கும்பல் தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகிறது. சில வெளிநாடுகளில் உள்ள திருட்டுக் கும்பலுக்கும் கூட இந்த விவகாரங்களில் தொடர்பு உண்டு.

சட்டம் என்ன சொல்கிறது?

அதீத வட்டி என சொல்லக்கூடிய கந்துவட்டி வசூலிக்கும் முறையை தடை செய்ய வேண்டும் என்று 2003ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதியன்று ஆளுநரின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு அதீத வட்டி வசூல் தடைச்சட்டம் – 2003கொண்டுவரப்பட்டது. 2004ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இச்சட்டம் அமல்படுத்தப்பட்டது. கடன் கொடுத்தவர்கள், கடனை திரும்ப வசூலிக்க கூலிப்படையைக் கொண்டு அப்பாவிகள் மீது கறாரான கீழ்த்தர நடவடிக்கைகள், தாக்குதல்களை நிகழ்த்திக் காட்டுவதால், ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டனர். இதை தடுப்பதற்காகவே அன்று கந்துவட்டி தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

தண்டனை என்ன?

  • தனியார் நிறுவனம் என்றாலும், தனிநபர் என்றாலும் வருடத்திற்கு 18 சதவீதத்திற்கு மேல் வட்டி வசூலிக்கக் கூடாது. இந்த அளவை விட அதிகமாக வட்டி வசூல் செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவருக்கு அதிக பட்ச தண்டனையாக மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் பரிந்துரைக்கப்படும்.
  • இந்த அவசர சட்டத்தின் கீழ், ஒவ்வொரு போலீஸ்காரருக்கும், “மணி நேர வட்டி, கந்து வட்டி, நாள் வட்டி, வார வட்டி மற்றும் தண்டல் போன்ற ஆடம்பர பெயர்களில் தினமும் வட்டி மற்றும் அபராத வட்டி வசூலிக்கும் வட்டிக்காரர்களுக்கு எதிரான புகார்களின் பேரில் தக்க நடவடிக்கை எடுக்க அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here