“ஊரே கூடி ஊழல் ஊழல் என்று ஓலமிட்டதை ஊடகத்தில் கண்டபின்பும், சாட்சி உண்டா? ஆதாரம் உண்டா? என கேட்கும் குணாதிசயம், கல்லுளிமங்கர் போன்ற ஊழலார்க்கே உரித்தான குணாதிசயம்.

ஆதாரத்துடன் வா, அரசியலுக்கு வா என்று அறைகூவல் விடும் தம்பி மாண்புமிகு. ஜெயகுமாரோ, அல்லது எலும்பு வல்லுனர் தம்பி எச். ராஜாவோ, நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டதை உணராதவர்கள். தெரிந்தோ தெரியாமலோ என்று இந்தித் திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்தேனோ, அன்றே நான் வயதுக்கு வராத அரசியல்வாதிதான்” என சுடச்சுட அறிக்கை விட்டு தமிழக முதல்வரையும், அமைச்சர்களையும் தூங்க விடாமல் செய்துள்ளார் கமல்.

பதிலுக்கு பதில்:
ஆளும் அ.தி.மு.க. அரசின் அமைச்சர்கள் விடும் வாய்ச்சவடால்களை எல்லாம் தனது பதில்களால் உடைத்து வீசுகிறார். பேச்சுத் திறமையை ஒரு அரசியல்வாதிக்கு வேறு என்ன தகுதி வேண்டும்? அ.தி.மு.க. அரசியல்வாதிகளின் பேச்சுக்களை எல்லாம் கமலுடன் ஒப்பிட முடியாது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

அமைச்சர்கள் ஓட்டம்:
“ஊழலே இல்ல நிரூபி பாப்போம்னு அமைச்சர் கேட்டார்ல.? ஊழல் இருக்குன்னா எழுதி அனுப்பிடுங்க. கார்டு, கவர்ல, கடுதாசில வேணாம். கிழிச்சுப் போட்டுட்டுப் போயிட்டே இருப்பாங்க. டிஜிட்டல் யுகம் இது. டிஜிட்டலா பதிவு செய்ங்க. ஆனா மரியாத தவறாம அதச் செய்ங்க.” என்று சொல்லி அனுப்ப வேண்டிய துறை சார்ந்த அமைச்சர்கள் முகவரி அடங்கிய இணையதளத்தின் linkஐயும் கூட குறிப்பிட்டிருந்தார்.

அடுத்த நாள் விடிவதற்குள்ளே தமிழக அரசு இணையதளத்தில் இருந்த அமைச்சர்களின் முகவரிகள், இ-மெயில்கள் எல்லாம் மாயமாக மறைந்தன. அமைச்சர் ஒருவரது முகவரியை கூட காணவில்லை; முதல்வர் உள்பட. இரவோடு இரவாக அத்தனை தொடர்பு விவரங்களும் இணையத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டன. கமலுக்கும் மக்களுக்கும் பயந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதை உணர முடிகிறது.

பா.ஜ.க.வின் குழப்பம்:
மோடி அறிவித்த தூய்மை இந்திய திட்டத்தில் முதலில் இணைந்தவர் கமல்ஹாசன். மத்திய அரசின் திட்டமான நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஓ.என்.ஜி.சி. குறித்து மக்களின் குரலாக அவர் எதையும் பேசவில்லை. இருப்பினும் மாநில அரசின் ஊழல் பற்றி மட்டும் விமர்சிக்கிறார். தமிழக பா.ஜ.க.வோ கமாலை கருப்பு சட்டைக் காரராகவும், இந்துமத விமர்சகராவும் பார்ப்பதால், ரஜினியின் அரசியல் ஆசையை கமலின் நடவடிக்கைகள் பின்தள்ளி விடுமோ என அச்சம் கொள்கிறது. இதனால்தான் திராவிடக் கட்சிகள் அழிய வேண்டுமென தொடர்ந்து முழங்கி வரும் தமிழக பா.ஜ.க, கமல் விவகாரத்தில் அ.தி.மு.க. அரசுக்கு வக்காலத்து வாங்குகிறது. கமலையும் கடுமையாக சாடுகிறது. ஆக மொத்தம் யாரை ஆதரிப்பது? யாரை விமர்சிப்பது? என்ற பெரும் குழப்பத்தில் சிக்கி முழிக்கிறது.

அரசியல் அரங்கேற்றம்:
இப்படி எல்லா தரப்பையும் குழப்பி வரும் கமல், கூடிய விரைவில் அரசியல் ‘அரங்கேற்றம்’ குறித்து அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் தெரிவித்திருக்கிறார். ட்விட்டரில் தாக்குதல்களை தொடங்கிய மறுகணமே தனது ரசிகர் படைகளை தயார் நிலையில் நிறுத்தி வைத்துள்ளாராம். மன்றத்தின் மாவட்ட செயலாளர்களிடம் நேரிலும் பேசியுள்ளாராம். இன்னொரு பக்கம், தனிக்குழு அமைத்து அ.தி.மு.க.வின் ஊழல் ஆதாரங்களை திரட்டி வருகிறாராம்.

ஆக, தமிழகத்தில் கூடிய விரைவில் ஒரு அரசியல் மாற்றம் ஏற்படும் என ஊர்ஜிதமாகிறது. அரசியல்வாதி கமல்ஹாசனை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here