விடிய விடிய காத்திருந்து ஐ.பி.எல். டிக்கட் வாங்கிய கிரிக்கெட் ரசிகர்களே!

0
280

இந்த ஆண்டிற்கான ஐ.பி.எஸ். போட்டிகள் வரும் 7ம் தேதியன்று தொடங்குகின்றன. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இரண்டு வருட தடைக்குப் பின் சென்னை அணி களம் இறங்குவதாலும், போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதாலும் தமிழக ரசிகர்களிடம் பெரும் உற்சாக அலை அடித்துக் கொண்டிருக்கிறது. ஐ.பி.எல். போட்டிக்கு டிக்கெட் விற்பனையும் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் இரவு முழுவதும் கால் கடுக்க வரிசையில் நின்று டிக்கெட்டுகளை வாங்கினார்கள்.

குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ. 1,300 ஆகும். அதிகபட்ச விலை ரூ. 6,500. இதே போல ரூ. 2,500, ரூ. 4,500, ரூ. 5,000 விலைகளிலும் டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன. ரூ. 1,300 மதிப்புள்ள டிக்கெட்டை வாங்கத்தான் ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்று இரவு முழுவதும் காத்திருந்து வாங்கி உள்ளனர். ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டன.

இப்போது விஷயம் என்னவென்றால், டிக்கெட் வாங்கிய ரசிகர்களுக்கு மைதானத்தில் ஒரு அசைன்மென்ட் செய்யுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார் பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். அதாவது இப்போது தமிழகத்தில் காவிரி பிரச்சினை குறித்த போராட்டங்கள் வீரியம் அடைந்துள்ளன. மேலாண்மை வாரியம் அமைப்பதில் வேண்டுமென்றே சிக்கலை ஏற்படுத்தி இருக்கிற மத்திய அரசை கண்டித்து தமிழகம் எங்கும் பல வழிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதை உலக அளவில் தெரியப்படுத்த ஒரு வழியை சொல்லியிருக்கிறார் அவர்.

வரும் 10ம் தேதியன்று சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி தொடங்க இருக்கிறது. இந்த மைதானம் சுமார் 50 ஆயிரம் இருக்கைகளை கொண்டது. போட்டி நடைபெறும் நேரத்தில் இந்த ஸ்டேடியம் காலியாக தெரிந்தால் சர்வதேச கவனத்தை ஈர்த்து விடலாம். உலகம் முழுவதும் ஒளிபரப்பாக இருக்கும் இந்த போட்டியை தொலைக்காட்சியில் காண்பவர்களுக்கு காரணம் என்னவென்று தெரிந்துவிடும். முதல்முறையாக பார்வையாளர்களே அல்லாத கிரிக்கெட் தொடரை சர்வதேச ஊடகங்கள் கிண்டலடிக்கும்.

டிக்கெட்டை வாங்கியிருக்கும் தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்ல தமிழகத்தில் வசிக்கும் பிற மாநில ரசிகர்களும் கூட இந்த தியாகத்தை செய்ய வேண்டும். இது தமிழர்களுக்கான போராட்டமாக மட்டுமே இருக்காது. காவிரி நீரால் உணவை பெறும் அனைத்து பொதுமக்களுக்குமான போராட்டமாக திகழும். காசு செலவில்லாமல் நமது போராட்டத்தின் கரு அனைத்து மக்களிடமும் சென்று சேர்ந்து விடும்.

ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 12ம் தேதியன்று காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறக்கப்படும். இந்தாண்டு நீர் திறப்புக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், காவிரிப் பிரச்சினை மீண்டும் பற்றி எரியத் தொடங்கியுள்ளது. நீர் வாழ்வாதார பிரச்சினையை அரசியல் பிரச்சினையாக மாற்றி இருக்கிறார்கள் சில சுயநல அரசியல்வாத பேய்கள். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை கையில் எடுத்ததைப் போல இப்போது மக்களாகிய நாம் இந்த பிரச்சனையையும் கையில் எடுக்க வேண்டும். இது மக்கள் பிரச்சனை. நம்முடைய பிரச்சனை. நாமே இதற்கு ஒரு நிரந்தர தீர்வை காண வேண்டும்.

தமிழகத்தில் வாழும் பிற மாநில மக்கள் இந்த பிரச்சனையை தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். இது இனப் பிரச்சினையோ அல்லது மொழிப் பிரச்சினையோ அல்ல. முழுக்க முழுக்க வாழ்வாதாரம் சார்ந்த பிரச்சனை. உணவுப் பிரச்சனை. பொதுஜன மக்களாகிய நாம், நமது உணவை தயாரித்துக் கொடுக்கின்ற அந்த விளைநிலங்களின் உயிர்ப் பிரச்சனை. காவிரி பொய்த்தால் டெல்டாவில் நம்முடைய அரிசி விளையாது. நிலம் மலடாகும்.

எனவே சென்னை சேப்பாக்கத்தில் நடக்க உள்ள கிரிக்கெட் போட்டியை தவிர்த்துவிடுங்கள். இது அந்த 50 ஆயிரம் பேருக்கு ஏற்படும் பண இழப்பு என்று எண்ணிக்கொள்ள வேண்டாம். இந்த போராட்டத்தால் தமிழகத்தில் வாழும் 7 கோடி பேர் பலன் அடைவார்கள். உங்களையும் சேர்த்து. நமது எதிர்கால உணவியல் பொருளாதாரத்தை காத்துக்கொள்ள தயவுசெய்து தியாகம் செய்திடுங்கள்.

இந்த தியாகத்தால், யாருக்கும் எந்தவித இழப்போ, நமது கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள இழப்போ அல்லது தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வருவாய் இழப்போ எதுவும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. இந்த போராட்டத்தால் அனைத்து உலக மக்களுடைய, அனைத்து நீதியரசர்களுடைய, ஊடகங்களுடைய கவனத்தையும் ஈர்த்து, நம்முடைய நோக்கத்தை தெளிவுபடுத்தி, அதன் மூலம் தீர்வை எட்டலாம் என ஜேம்ஸ் வசந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.

விடிய விடிய காத்திருந்து ஐ.பி.எல். டிக்கட் வாங்கிய கிரிக்கெட் ரசிகர்களே… இதை செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here