இந்த நவராத்திரிக்கு இப்படி வித்தியாசமா செஞ்சு அசத்துங்க!!

0
2820

நவராத்திரி பண்டிகையின் போது ஒவ்வொரு மாலையும் சுவையாகவும் அதே சமயம் வீட்டிற்கு வரும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு விருப்பமான பலகாரங்கள் செய்ய வேண்டும். என்ன செய்யலாம் என யோசித்து குழம்புகிறீர்களா?

தினமும் ஒரே மாதிரி சுண்டல் தயாரிப்பது அலுப்பாக இருக்கும். என்ன செய்யலாம் என யோசிக்கிறீர்களா? இதோ சில வகை வித்தியாசமான ரெசிபிக்கள். வீட்டில் செஞ்சு அசத்துங்க. நேரமும் குறைவாகத்தான் தேவைப்படும். வருபவர்களும் உங்களை புகழாமல் போக மாட்டார்க்ள்

தேங்காய் பால் அல்வா :

தேவையானவை:

தேங்காய்ப் பால்- 1 கப்
கடலை மாவு – ஒரு கப்,
மைதா மாவு – அரை கப், சர்க்கரை- 2 கப்
நெய் – 2 கப்.

செய்முறை:

தேங்காய்ப் பாலில் முதலில் கடலை மாவு, மைதா மாவு சேர்த்து கட்டியாகாமல் கலக்குங்கள். அதன் பின் அதில் சர்க்கரை கலக்குங்கள். அதன் பின்னர் கனமான பாத்திரத்தில் சிறிது நெய் இட்டு, இந்த கலவையை ஊற்றவும்.

பின்னர் சிறிது நெய் விட்டு கிளற வேண்டும். அடுப்பு மிதமான தீயில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். நன்றாக வெந்த பின் மீதியுள்ள நெய் சேர்த்து சுருளக் கிளற வேண்டும். பாத்திரத்தில் ஒட்டாமல் நன்றாக இளகி வரும் பதம் சரியான பதம்.

அந்த சமயத்தில் இறக்க வேண்டும். பின்ன விருப்பப்பட்டால் நெய்யில் முந்திரி திராட்சையை வறுத்து அல்வாவில் தூவுங்கள்.

ஜவ்வரிசி சுண்டல் :

தேவையானவை:

ஜவ்வரிசி – ஒரு கப்,
கடுகு,
பெருங்காயம்,
கறிவேப்பிலை,
எண்ணெய் – தாளிக்க
தேங்காய் துருவல் – கால் கப்,
காய்ந்த மிளகாய் – 4,
எலுமிச்சைச் சாறு – 1 ஸ்பூன்
மஞ்சள்தூள், உப்பு – ஒரு சிட்டிகை.

 

செய்முறை:

ஜவ்வரிசியை லேசாக வறுத்து அதனுடன் இரு பங்கு சுடு நீர் ஊற்றி ஊற விடுங்கள். அதன் பின் ஒரு மணி நேரம் கழித்து நீரை வடித்து விடுங்கள். அதன் பின் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, பெருங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், மஞ்சள்தூள் போட்டு, அதனுடன் ஊற வைத்த ஜவ்வரிசி, தேங்காய் துருவல், உப்பு சேர்த்துக் கிளறுங்கள். பின்னர் ஜவ்வரிசி வேகும் வரை சில நிமிடம் வரை வேக வையுங்கள்.

அதற்கு பிறகு லேசாக ஆறியவுடன் எலுமிச்சைச் சாறு பிழிந்து கலக்க வேண்டும். இப்போது ஜவ்வரிசி சுண்டல் தயார்.

அவல் பொங்கல் :

தேவையானவை:

அவல் – ஒரு கப்,
நெய் – கால் கப்
முந்திரி – 10கறிவேப்பிலை- தேவையான அளவு,
மிளகு- ஒரு டீஸ்பூன்
சீரகம் –ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – ஒன்று ,
எண்ணெய்-தேவையான அளவு.
உப்பு – தேவையான அளவு.
கடுகு-– தாளிக்க

செய்முறை:

அவலை நன்றாக 3 முறை கழுவி நீரை வடிக்கட்டிக் கொள்ளுங்கள். மிளகு சீரகம் பொடி செய்து கொள்ளவும். பின்னர் வாணலியில் நெய் விட்டு, முந்திரியை வறுத்துக் கொள்ளுங்கள்.

அதே வாணலியில் நெய்யுடன் எண்ணெய் சிறிதளவு கலந்து கடுகு, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிய பின் ஊற வைத்த அவல், போட்டு கிளறுங்கள்.

பின்னர் பொடி செய்த மிளகு சீரகம் மற்றும் உப்பு கலந்து நன்கு கிளறுங்கள். அருமையான அவல் பொங்கல் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here