சென்னை மழை வெள்ளத்தில் 2 சிறுமிகள் உள்பட ஒரு பெண் பலி!

0
196

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சாலைகள், தெருக்கள் எங்கும் மழை நீர் தேங்கியுள்ளதால் வெள்ளம் சூழ்ந்திருப்பதை போல தோற்றம் அளித்துக் கொண்டிருக்கிறது. பல பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. தேங்கியுள்ள மழை நீரிலேயே பல குடும்பங்கள் தத்தளித்து வருகின்றன.

யுவஸ்ரீ மற்றும் பாவனா

இந்நிலையில், சென்னை – கொடுங்கையூரில் மழை நீரில் விளையாடிக் கொண்டிருந்த பாவனா, யுவஸ்ரீ என்ற இரண்டு குழந்தைகள் மீது மின்சாரம் பாய்ந்தது. இந்த விபத்தில் இரண்டு சிறுமிகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அருகில் உள்ள மின்சார பெட்டியில் இருந்து தண்ணீருக்குள் மின்சாரம் இறங்கியுள்ளதை மக்கள் பின்னரே கண்டுபிடித்துள்ளனர். இப்பகுதியில் உள்ள மின்சார பெட்டியை சரிசெய்ய நீண்ட நாட்களாகவே அப்பகுதி மக்கள் மின்சார வாரிய ஊழியர்களிடம் புகார்களை தெரிவித்திருந்தனர். அவர்களின் அலட்சியத்தால் இப்போது இரு உயிர்கள் பலியாகியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட ஊழியர்களை மின்சார வாரிய நிர்வாகம் பணி நீக்கம் செய்திருக்கிறது.

இதே போல சென்னை – ஓட்டேரியில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஓட்டேரி, சுப்பிராயன் நான்காவது தெருவில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. வீட்டிற்குள்ளும் முழங்கால் அளவுக்கு மழை நீர் தேங்கியிருக்கிறது. அங்கு வாடகை வீட்டில் வசிக்கும் பவுனாம்பாள் என்ற பெண், மழை நீர் தேங்கிய வீட்டிற்குள் நடந்தபோது நிலை தடுமாறி வழுக்கி விழுந்துள்ளார். இதில் பின்னந்தலையில் அவருக்கு பலத்த அடி ஏற்பட, மயக்க நிலை அடைந்துள்ளார். மருந்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்துள்ளது.

வீடுகளுக்கு உள்ளேயும், வெளியேயும் மக்கள் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகளை வெளியில் அனுப்ப வேண்டாம். மழைநீர் வடியும் வரை கீழே வர வேண்டாம். மாநகராட்சி ஊழியர்கள் நிலைமையை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். பல இடங்களில் இருந்து மழை வெள்ளம் வெளியேற்றப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here