இந்த கோயிலில் நின்று பொய் சொன்னால் 10கி.மீ. நீளமுடைய பாம்பு கொல்லும்!

0
36721

விழுப்புரம் மாவட்டம் தூம்பூர் தாங்கலில் சுமார் 500 ஆண்டுகள் பழைமையான நாகாத்தம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த அம்மனை வணங்கினால் ராகு-கேது தோஷங்கள், நாக தோஷங்கள் நிவர்த்தனை ஆகும் என்பதால் பக்தர்கள், தோஷ பரிகாரிகள் அதிகம் வந்துகொண்டே இருப்பர். இங்கேதான் அமைந்திருக்கிறது 10 கிலோ மீட்டர் நீளமுடைய நாகத்தின் தடம்.

500 ஆண்டுகள்:
ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பாக இந்திய நிலப்பரப்பில் நாக வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றதாக இருந்தது. இப்போது தென்னிந்தியப் பகுதிகளில் நாக வழிபாடும், நாகர்களுக்கான வழிபாட்டு தளங்களும் மிக குறைவுதான் என்றாலும், ஒரு சில இடங்கள் இக்காலத்திலும் பிரசித்தி பெற்ற நாக ஸ்தலங்களாக அமைந்திருக்கின்றன. அதில் நாகர்கோயில், தூம்பூர் ஆகிய ஸ்தலங்கள் முக்கியமானவை. நாகர்கோயில் நாகராஜாவுக்கும், தூம்பூர் நாககன்னிக்குமான ஸ்தலம் ஆகும்.

10 கி.மீ. நாகம்:
மிக உயரமான சாமி சிலைகளை நாம் வியப்புடன் பார்ப்போம். ஆனால் இங்கே கிடைமட்டமாக சுமார் 10 கிலோ மீட்டர் அளவுக்கு மிகப்பெரிய ராட்சத நாகத்தின் சிலை அமைந்துள்ளது. இச்சிலையை முழுமையாக காண முடியாது. தலையை ஒரு இடத்திலும், நாடு உடலை மற்றொரு இடத்திலும், வால் பகுதியை மற்றுமொரு இடத்திலும் உள்ள கோயில்களில்தான் தரிசிக்க முடியும். பத்து கிலோ மீட்டருக்குள் ஒவ்வொரு உறுப்பிற்கும் மூன்று கோயில்கள் அமைந்துள்ளன.

திருவட்டப்பாறை:
இந்த கோயில்களில் திருவட்டப்பாறை என்று ஒரு மாடம் இருக்கிறது. வழக்குகளில் யாரேனும் பொய் சொல்கிறார்கள் என்று தெரிந்தால் அவரை இந்த திருவட்டப்பாறையின் மீது நிற்கவைத்து உண்மையை சொல்லச் சொல்வார்கள். உண்மையை சொன்னால் தப்பிப்பார். பொய்யாக இருந்தால் அவர்களது பார்வை பறிபோகும். இது அப்பகுதி மக்களுடைய நம்பிக்கை அல்ல. இப்போதும் நடந்துகொண்டிருக்கும் உண்மையே.

திருத்தலம் வரலாறு:
இந்த திருவட்டப்பாறையும் 500 ஆண்டுகால பழம்பெருமை வாய்ந்தது. அக்காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்து வந்த மன்னனின் முன்னிலையில் ‘அண்ணன்-தம்பி’ வழக்கு ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. திருவட்டப்பாறையின் மீது ஏறி நின்ற அண்ணன், பொய் கூறினான். அப்போது பாறைக்கு அடியில் இருந்து வெளியில் வந்த ராட்சத பாம்பு வானளவுக்கு நின்று சீறியது. பொய் உரைத்த அண்ணனை நீண்ட தூரம் வரை துரத்தி கொன்றது. வால் அங்கிருந்த அம்மன் சிலையை சுற்றிப் பிணைந்திருக்க, வயல் வழியாக ஓடி, பொய் சொன்ன அண்ணனை தூம்பூரில் கடித்துக் கொன்றுள்ளது இந்த ராட்சத நாகம்.

வழிபாடு:
எனவே இந்த ஸ்தலத்தில், நாக தோஷம் உள்ளவர்கள் மட்டுமின்றி, பொய் வழக்குகளில் சிக்கியவர்களும், வில்லங்க வழக்குகளால் நிம்மதியை இழந்தவர்களும், திருட்டு, கொள்ளையால் பொருட்களை பறிகொடுத்தவர்களும் கூட வழிபாடு நடத்த வருவார்கள்.

எப்படி செல்லலாம்?
விழுப்புரம் மாவட்டம், திருவமுதூரை அடுத்து, தூம்பூர் தாங்கல் என்ற இடத்தில் அமைந்துள்ள இக்கோயிலை சென்றடைய தேசிய நெடுஞ்சாலை எண் 38ல் சுமார் 15கி.மீ. பயணிக்க வேண்டும். விக்கிரவாண்டியில் இருந்து குறிச்சிபாடி, ஓரத்தூர் வழியாக 12 கி.மீ. பயணித்தாலும் இந்த கோயிலை அடைய முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here